தீக்குளித்த தாய் பரிதாப சாவு
9-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ததால் மனம் உடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குஜிலியம்பாறை அருகே உள்ள முத்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். கடந்த 1-ந்தேதி இவர், வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வந்தார். அங்குள்ள தனது உறவுக்கார பெண்ணான 9-ம் வகுப்பு மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தினார். பின்னர் அந்த மாணவியை, தனது மகனான மெக்கானிக் அருண்குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக வடமதுரை போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் கண்ணீர் மல்க புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தனது மகளுக்கு நேர்ந்த சம்பவம், தாயை வெகுவாக பாதித்தது. இதனால் தான், இருப்பதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
இதனையடுத்து கடந்த 2-ந்தேதி, தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி உடலில் தீ வைத்தார். உடலில் தீப்பற்றிய நிலையில் அவர் வேதனையில் அலறினார். அந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகி, உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவியின் தாய் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே மாணவியை கடத்தி திருமணம் செய்தது குறித்து பாண்டியன், அவரது மனைவி ஜானகி, அருண்குமார், உறவினர்கள் சிவசக்தி (40), ராஜம்மாள் (37) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவசக்தி, ராஜம்மாள் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள பாண்டியன், ஜானகி, அருண்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவி மீட்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.