கெங்கவல்லி அருகே மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச்சென்றவர்கள் விபத்தில் சிக்கினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சி பரவியதால் பரபரப்பு
கெங்கவல்லி அருகே மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச்சென்றவர்கள் விபத்தில் சிக்கினர். மேலும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கெங்கவல்லி,
கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் சாலையில் கடந்த 30-ந் தேதி மாலை 6 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் அதிவேகமாக ஓட்டிச்சென்றனர். அவர்கள் அனைத்து வாகனங்களையும் மோதிக்கொண்டு செல்வது போல அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் வந்த சரக்கு வேன் மீது அவர்களின் மோட்டார் சைக்கிள் ேமாதி விபத்துக்குள்ளானது. இதில் அவர்கள் சாலையில் உருண்டு விழுந்து காயம் அடைந்த காட்சியை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் படம்பிடித்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விபத்துக்குள்ளான இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரித்த போது, விபத்தில் காயம் அடைந்தவர்கள் பள்ளக்காடு பகுதியில் உள்ள மணி, அங்கமுத்து என்பது தெரியவந்தது. இதில் மணி பலத்த காயம் அடைந்ததால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தார்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.