மாயமான தொழிலாளி கல்லால் தாக்கி கொலை
நெல்லையில் மாயமான தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே, ேபாலீசை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் மாயமான தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே, ேபாலீசை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூலி தொழிலாளி
நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் காசி நாடார் மகன் மாயாண்டி (வயது 58), கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 26-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாயாண்டியின் மனைவி புஷ்பா தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மாயமான மாயாண்டியை கண்டுபிடித்து தரக்கோரியும், போலீசாரை கண்டித்தும் அவரது உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்லால் தாக்கி...
இதற்கிடையே, தச்சநல்லூர் அருகே சிதம்பரநகர் காட்டுப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக, அங்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாதுரை, பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மாயமான மாயாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகராறு
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மாயாண்டி தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் வேலை பார்த்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த மாரிமதன் (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று மாயாண்டியும், மாரிமதனும் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தனர். எனவே, மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மாரிமதன், மாயாண்டியை கல்லால் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலை வாங்க மறுப்பு
இதற்கிடையே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாயாண்டி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண நிதி வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.
நெல்லையில் மாயமான தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.