வரி செலுத்தாதவர்களின் பெயர் விளம்பர பலகையில் ஒட்டப்படும்
நாகை நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் பெயர் விளம்பர பலகையில் ஒட்டப்படும் என ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகை நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் பெயர் விளம்பர பலகையில் ஒட்டப்படும் என ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரி பாக்கி
நாகை நகராட்சி தற்போது தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது.
2022-23-ம் ஆண்டு வரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை நிலுவையாக ரூ.11 கோடியே 7 லட்சம் பாக்கி உள்ளது. இதனால் நகராட்சி நிதி நிலைமை மிகவும் பற்றாக்குறையாக உள்ளதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை உடனுக்குடன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீல் வைக்கப்படும்
எனவே சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாளசாக்கடை கட்டணம், கடைவாடகை மற்றும் தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றை செலுத்தாதவர்கள் உடனே செலுத்த வேண்டும் என நீண்ட காலமாக நகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.அதேபோல நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பவர்கள் 3 நாட்களுக்குள் நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும்.
மேலும் கோவில் இடங்களில் கட்டிடங்கள் கட்டிக் குடியிருப்போர், வணிகம் செய்வோர், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையினை உடன் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி விதிகளின்படி, கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும்.
விளம்பர பலகையில் ஒட்டப்படும்
வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியல், விளம்பரப் பலகையில் ஒட்டப்படும் மற்றும் தினசரி நாளிதழ்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.