குறுகலான சாலையை அகலப்படுத்தி தர வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே குறுகலான சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே குறுகலான சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து மிகுந்த சாலை
கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் இருந்து திட்டச்சேரி வழியாக சேந்தங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், விக்ரபாண்டியம், சேந்தங்குடி, புத்தகரம், மாவட்டக்குடி, செருவாமணி, திருநெல்லிக்காவல், எட்டுக்குடி போன்ற ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி -கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள், லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
கருவேல மரங்கள்
இந்த சாலையில் திட்டச்சேரி பிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும், அந்த இடத்தில் சாலையின் இரண்டு பக்கமும் கருவேல மரங்கள் காடுகளாக காட்சி அளிக்கிறது. அதனால், குறுகலான சாலையை கடந்து செல்ல முடியாமல் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றன.
மேலும், குறுகலான சாலை உள்ள இடத்தில் ஒரு பக்கம் வெண்ணாற்றின் கரையோரம் என்பதாலும், மறுபக்கம் வாய்க்கால் கரையோரம் என்பதாலும் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்லும் போது ஆற்றிலோ அல்லது வாய்க்காலிலோ விழுந்து விபத்து ஏற்படுமோ என்று வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
குறுகலான சாலை
அதனால், திட்டச்சேரி தொடங்கி திருநெல்லிக்காவல் வரையிலும் குறுகலாக உள்ள சாலையை அகலமான சாலையாக மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.