வீடு, வீடாக சென்று தேசியக்கொடி
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் வீடு, வீடாக சென்று தேசியக்கொடி ஊராட்சி மன்ற தலைவர்கள் வழங்கினர்
திருவெண்காடு:
சுதந்திர தின விழா நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து வீடு வீடாக சென்று மக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினர். இதேபோல் காவிரி பூம்பட்டினம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூம்புகார் மீனவர் காலனி, புது குப்பம், நெய்தவாசல் மற்றும் கீழையூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தேசிய கொடியை வழங்கினர். திருவெண்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், துணைத் தலைவர் மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேசியக்கொடியை வீடு வீடாக சென்று வழங்கினார். இதேபோல சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 37 ஊராட்சிகளில் தேசியக்கொடி வழங்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.