தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை நுழைய தடை விதிக்க வேண்டும்; நெல்லை முபாரக் பேட்டி
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை நுழைய தடை விதிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை நுழைய தடை விதிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் கைப்பாவை
தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒரு போலியான குற்றச்சாட்டை முன்வைத்து போலியான தேடுதல் வேட்டை நடத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளை முடக்கும் நடவடிக்கைகயாக சோதனை நடத்தி உள்ளது மத்திய பா.ஜனதா அரசு.மத்திய அரசு தனது கைப்பாவையாக உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கொண்டு இந்த சோதனைகளை செய்து வருகிறது.
விடுதலை செய்ய வேண்டும்
இந்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்டு உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலேயே என்.ஐ.ஏ. செயல்பாடுகள் அமைந்துள்ளது. ஒருபோதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை இத்தகைய அடக்குமுறைகளை கொண்டு ஒடுக்க முடியாது. அதேபோல் இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர்களை குறிவைத்தும், அதன் தலைவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
என்.ஐ.ஏ.க்கு தடை
இந்த சோதனை குறித்து தமிழக காவல் துறைக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சோதனைகள் பெரும்பாலும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் தான் குறிவைத்து நடத்தப்பட்டு உள்ளது. மேலும், சிறுபான்மை மக்களை, அவர்களின் நலனுக்காக செயல்படும் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தி, ஒரு பெரும்பான்மை வாதத்தை நோக்கி நாட்டை நகர்த்தவும் பா.ஜனதா அரசால் இந்த முகமை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைந்து இத்தகைய பாசிச ஆட்சியை எதிர்த்து தோற்கடிக்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அவர் தமிழகத்தில் என்.ஐ.ஏ. போன்ற அமைப்புகள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர்கள் அலாவுதீன், மீராஷா, துணை தலைவர்கள் எஸ்.எஸ்.கனி, ஹயாத் முகமது, செயலாளர் முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர்.