பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: தமிழக அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப் போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினார்கள்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
11 பேர் கைது
இதில் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை நடைபெற்ற அன்று பல்வேறு இடங்களில் இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.
பெட்ரோல் வெடிகுண்டுகள்
கோவையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என 7 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குவிக்கப்பட்டனர். பதற்றத்தை தணிக்க கொடி அணிவகுப்பும் நடைபெற்றது.
இந்த நிலையில் கோவையை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பா.ஜ.க. பிரமுகர்களின் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டிலும் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அலுவலகங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ரெயில் நிலையங்களும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.
இதற்கிடையே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பேணி காப்பது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளையும் வழங்கினார்.
சைலேந்திரபாபு எச்சரிக்கை
இந்த நிலையில் தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுஎச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி அன்று சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் இந்த சோதனையின்போது 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த 1,410 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் தஞ்சையில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோரும் அடங்குவர். அவர்களது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
250 பேரிடம் விசாரணை
இதைத்தொடர்ந்து மண்எண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறி வைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் முக்கிய நபர்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்எண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
கோவை மாநகரில் கலவர தடுப்பு படையினர் 2 பிரிவுகள், மாநில கமாண்டோ படையின் 2 பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை 2 பிரிவுகள் மற்றும் கூடுதலாக 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் முகாமிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைத்து குற்றவாளிகளும், உடந்தையாக இருந்தவர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒரு வருடம் வரை
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை எந்த காரணமும் இன்றி ஒரு வருடம் வரை கைது செய்து வைத்திருக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்.