தேனி கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி


தேனி கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
x

விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தேனி கலெக்டர் தலைமையில் நடந்த 4-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. தொழிலாளர்கள் 11-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.

தேனி

காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில், 2,500-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. சக்கம்பட்டி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும், டி.சுப்புலாபுரம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் செயல்படுகின்றன.

அங்கு வேலை பார்க்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். அதன்படி கடந்தமுறை போடப்பட்ட ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த 2 ஆண்டுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படவில்லை.

3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்படாததால், கடந்த 2-ந்தேதி முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து கடந்த 4-ந்தேதி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதன் தொடர்ச்சியாக தாலுகா அலுவலகத்தில் நடந்த 2-வது கட்ட பேச்சுவார்த்தையும், திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த 3-வது கட்ட பேச்சுவார்த்தையும் தீர்வுகள் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது.

கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை

இதையடுத்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை, தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இதில், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் கோவிந்தன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

மீண்டும் தோல்வி

இந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் தரப்பில் 14 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். உரிமையாளர்கள் தரப்பில் 10 சதவீதம் கூலியை உயர்த்த முன்வந்தனர். ஆனால், அதை தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 5 மணி வரை நீடித்தது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாமல், தோல்வியில் முடிந்தது. இதனால் 5-வது கட்ட பேச்சுவார்த்தையை திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற 18-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் நேற்று 11-வது நாளாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், விசைத்தறி கூடங்களின் பணிகள் 11-வது நாளாக முடங்கியுள்ளன.


Next Story