காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை தற்கொலை


காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2023 10:59 PM IST (Updated: 17 July 2023 2:56 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே காதல்திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

காதல் திருமணம்

குடியாத்தத்தை அடுத்த பெரியபரவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பரசுராமன் (வயது 19). குடியாத்தம் அருகே உள்ள தனியார் ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். பெரிய ராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்த கார்த்தியின் மகள் சத்யா (18) என்பவரும், பரசுராமனும் காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் நெல்லூர்பேட்டை புத்தர் நகர் பகுதியில் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். தற்போது சத்தியா 9 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியபரவக்கல் கிராமத்தில் உள்ள பரசுராமன் வீட்டில் வைத்து சத்யாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சத்யா தனது பெற்றோர் வீடான பெரியராஜாகுப்பம் கிராமத்திற்கு சென்று விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

குடியாத்தம் புத்தர் நகரில் உள்ள வீட்டில் பரசுராமன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவர் மனைவி சத்யாவுக்கு போன் செய்து வருத்தத்துடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் அதே போல் விரக்தியுடன் போனில் பேசியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சத்யா தனது கணவர் பரசுராமனை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து தனது பெற்றோருடன் புத்தர் நகரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது பரசுராமன் வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா உறவினர்கள் உதவியுடன் பரசுராமனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகி 10 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கர்ப்பிணி மனைவி சத்யா கதறி அழுதது காண்போர் கண்களை கலங்க வைத்தது.


Next Story