புது மாப்பிள்ளையை கடத்திச்சென்று அடித்துக் கொலை


புது மாப்பிள்ளையை கடத்திச்சென்று அடித்துக் கொலை
x

சோளிங்கர் அருகே புது மாப்பிள்ளையை கடத்திச்சென்று அடித்துக் கொலை செய்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அருகே புது மாப்பிள்ளையை கடத்திச்சென்று அடித்துக் கொலை செய்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புது மாப்பிள்ளை மீது தாக்குதல்

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஐயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). புது மாப்பிள்ளை. இவர் தனது மாமனார் உமாபதி என்பவருடன் நேற்று இரவு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். அப்போது கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 10-க்கும் மேற்பட்டோர் திடீரென சரத்குமார் மற்றும் அவரது மாமனார் உமாபதியை சரமாரியாக தாக்கி, சரத்குமாரை அவர்கள் மோட்டார்சைக்கிளில் கடத்திச் சென்றனர்.

பின்னர் கூடலூர் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் சரத்குமாரை மீண்டும் தாக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் உறவினர்கள் விரைந்து சென்று சரத்குமாரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரத்குமாரை தாக்கிய மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து சோளிங்கர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சோளிங்கர் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரவி, ராஜேந்திரன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் கொலையாளிகள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஐப்பேடு பகுதியை சேர்ந்த அசோக்பாண்டியன் (24), துரைப்பாண்டியன் (23), தாமோதரன் (24), கோபி (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சரத்குமாரை அடித்தாக தெரிவித்தனர். சம்பவத்தன்று பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story