டெல்டா பகுதியில் மாநில அரசு அனுமதியின்றி என்.எல்.சி. எந்த பணியும் செய்யாதுவிவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு


டெல்டா பகுதியில் மாநில அரசு அனுமதியின்றி என்.எல்.சி. எந்த பணியும் செய்யாதுவிவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பகுதியில் மாநில அரசு அனுமதியின்றி என்.எல்.சி. நிர்வாகம் எந்த பணியும் செய்யாது என்று கடலூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடலூர்


கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

ஆக்கிரமிப்புகள்

அமரேசன் (விவசாயி) :- நல்லூர் ஒன்றிய பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கலெக்டர்:- சர்வேயர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இருப்பினும் 3 மாதங்களில் 380 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. 400 ஏரிகள் தூர்வாரப்பட உள்ளது. விரைந்து மீதியுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.

மகாராஜன் (விவசாயி) :- மங்களூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கொட்டாரம்- ஆவடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

என்.எல்.சி. புதிய சுரங்கம்

மாதவன் (விவசாயிகள் சங்க தலைவர்) :- என்.எல்.சி. புதிய சுரங்க திட்டத்திற்காக 90 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது. வீராணம் ஏரி பகுதியில் நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் இந்த செய்திகள் உலா வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய பதில் சொல்ல வேண்டும். வேளாண் மண்டலமாக உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி தாலுகா பகுதிகளை பாலைவன மாக்கும் இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். பண்ருட்டி ஒன்றியத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் முந்திரி மரங்கள் சாய்ந்தன. ஆகவே அவர்களுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க வேண்டும்.

கலெக்டர்:- வீராணம் ஏரி பகுதியில் மத்திய அரசு அனுமதியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்ததும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகிறது. ஆகவே மாநில அரசு அனுமதி இல்லாமல் என்.எல்.சி. நிர்வாகம் எந்த பணியும் செய்யாது.

மின் மீட்டர் பற்றாக்குறை

தேவநாதன் (விவசாயி) :- கடலூர் மாவட்டத்தில் மின் மீட்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால் வீடுகளில் கட்டிட வேலைகள் நடைபெறவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்துறை அதிகாரி:- விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேல்முருகன் (விவசாயி):- தாலுகா, கோட்ட அளவில் நடக்கும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும்.

கலெக்டர்:- பட்டா தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காண தான், தாலுகா, கோட்ட அளவில் கூட்டம் நடக்கிறது.முதலில் வருவாய்த்துறை சார்ந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

ரவீந்திரன் (விவசாயி) :- என்.எல்.சி.க்காக நீங்கள் விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்துவது வேதனை அளிக்கிறது.

கலெக்டர்:- என்.எல்.சி. பிரச்சினை பற்றி இங்கு பேச வேண்டாம்.

பீதி அடைய தேவையில்லை

ரவீந்திரன்:- வீராணம் ஏரி பகுதியில் மத்திய சுரங்கத்துறை சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, தாதுப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறது. அந்த ஆய்வு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பூமிக்கடியில் 220 மீட்டர் தூரத்தில் 13 இடங்களில் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடம் தற்போது அதிகரித்து உள்ளது. இது என்.எல்.சி. நிர்வாகம் தண்ணீரை உறிஞ்சுவதால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

கலெக்டர்:- நீங்கள் கூறுவது பற்றி உண்மையான நிலவரம் தெரியவில்லை. இருப்பினும் வீராணம் ஏரி பகுதியை சுற்றிலும் முதல் கட்ட ஆய்வு பணியே முடியவில்லை. அப்படியே பூமிக்கடியில் தாதுப்பொருட்கள் இருந்தாலும், அதை மாநில அரசு அனுமதியின்றி எடுக்க முடியாது. ஆகவே பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.

செல்வராஜ் (விவசாயி) :- ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் 40 கிராமங்கள் உள்ளன. பாளையங்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் ஆய்வாளர் இடத்தை உருவாக்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

வேளாண்மை அதிகாரி:- நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

தரிசு நிலம்

முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இதை விளை நிலங்களாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஒரே மாதத்தில் 33 ஆயிரத்து 367 கிஷான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் விவசாய வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் முருகானந்தம், காந்தி, குஞ்சிதபாதம், அறவாழி, ரெங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story