விருத்தாசலம் அருகே நள்ளிரவில் வாய்க்காலுக்குள் பாய்ந்த காரில் மனைவியுடன் சிக்கித்தவித்த என்.எல்.சி. அதிகாரி போலீசார்-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


விருத்தாசலம் அருகே நள்ளிரவில்     வாய்க்காலுக்குள் பாய்ந்த காரில் மனைவியுடன் சிக்கித்தவித்த என்.எல்.சி. அதிகாரி           போலீசார்-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே நள்ளிரவில் சாலையோர பாசன வாய்க்காலுக்குள் பாய்ந்த காரில் மனைவியுடன் சிக்கித்தவித்த என்.எல்.சி. அதிகாரியை போலீசார், தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கட்டுப்பாட்டை இழந்த கார்

விருத்தாசலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் நாகர்கோவிலில் இருந்து நெய்வேலிக்கு காரில் வந்தபோது வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் கோமங்கலம் அருகே கார் எனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் பாய்ந்து தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதாகவும், விரைவில் வந்து காப்பாற்றுமாறும் கூறியுள்ளார். உடனே போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய காரை தேடினர். நள்ளிரவு நேரம் என்பதால் விபத்து நடந்த இடத்தை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து போலீசார் தங்களை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் மூலம் லொக்கேஷனை ஷேர் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

கணவன்-மனைவி மீட்பு

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாட்ஸ்அப் லொக்கேஷனில் காட்டப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாலையோர பாசன வாய்க்காலில் கார் ஒன்று தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் வாய்க்காலுக்குள் இறங்கி காருக்குள் இருந்த கணவன்-மனைவியை பத்திரமாக மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-1 ஏவில் துணை பொது மேலாளராக பணிபுரிந்து வரும் ரமேஷ்(வயது 53) மற்றும் அவரது மனைவி பிரபா என்பதும், இருவரும் சொந்த ஊரான நாகர்கோவில் சென்று விட்டு வரும் வழியில் சாலையோர பாசன வாய்க்காலுக்குள் கார் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியதும் தெரியவந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் இருவரும் உயிர் தப்பினர். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனிடையே விபத்துக்குள்ளான கார் தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story