கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் காலில் விழுந்த அதிகாரி
கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் காலில் விழுந்த அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோடந்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், ஒன்றிய பற்றாளராக, க.பரமத்தி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேது, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சமூக ஆர்வலர் மெய்ஞானமூர்த்தி எழுந்து கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் மூலத்துரையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு வீட்டு ரசீது வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வீட்டு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தீர்மான நோட்டில் ஊராட்சி மன்ற தலைவர் அழித்துவிட்டு வீட்டு ரசீது வழங்க இயலாது என திருத்தம் செய்துள்ளார். இது சம்பந்தமாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டருக்கு தபால் மூலம் மனு அளித்துள்ளனர். எனவே ஏன் திருத்தம் செய்துள்ளீர்கள் என கேட்டார்.கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் காலில் விழுந்த அதிகாரியால் பரபரப்புஇதனையடுத்து ஊராட்சி துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேது திடீரென எழுந்து பொதுமக்களிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, கூட்டம் நடத்த விடுங்கள் என கேட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், செல்வி (ஊராட்சிகள்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அறிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.