பழமையான வேளாண் கிடங்கு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்
பழமையான வேளாண் கிடங்கு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்
ெகாள்ளிடத்தில் பழமையான வேளாண் கிடங்கு கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் கிடங்கு கட்டிடம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்துக்கு அருகில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வேளாண்மை கிடங்கு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு தேவையான விதை நெல், உரங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டங்கள், வேளாண் கருவிகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன. பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் உள்ள மேற்கூரையின் வழியே மழை நீர் உள்ளே புகுந்து வந்ததால் கட்டிடத்துக்குள் வேளாண் இடு பொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது. இதனால் வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் அலுவலக கட்டிடத்துக்குள் ஒரு பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
கடந்த 3 ஆண்டு காலமாக இந்த கட்டிடத்தில் இடுபொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் கட்டிடம் பராமரிப்பின்றி இருந்து வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு அதில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.