மூதாட்டி உடலை கால்வாய்க்குள் இறங்கி மயானத்திற்கு தூக்கி சென்ற அவலம்


மூதாட்டி உடலை கால்வாய்க்குள் இறங்கி மயானத்திற்கு தூக்கி சென்ற அவலம்
x

மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் மூதாட்டி உடலை கால்வாய்க்குள் இறங்கி மயானத்திற்கு தூக்கி சென்றனர். இந்த அவல நிலையை போக்க பாலம் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

கால்வாய்க்குள் இறங்கி...

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உறவினர்கள் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் மூதாட்டி உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஆனால் மயானத்திற்கு முன்பு அலங்கார ஊர்தி நிறுத்தப்பட்டு மூதாட்டியின் உடலை உறவினர்கள் தூக்கிக் கொண்டு அந்த வழியாக செல்லும் கல்லணை பாசன கால்வாய்க்குள் தடுமாற்றத்துடன் செங்குத்தாக இறங்கி மறு கரையில் ஏறி மயானத்திற்கு கொண்டு சென்றனர். பாசன கால்வாயில் தண்ணீர் வரும் போது மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

பாலம் வேண்டும்

இந்த மயானத்திற்கு செல்ல பல வருடங்களாக சாலை வசதியே இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயை கடக்க பாலம் அமைக்காததால் இப்படி ஆபத்தான முறையில் இறந்தவர்கள் உடல்களை தூக்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல வருடமாக கோரிக்கை வைத்து மயானத்திற்கு சாலை கிடைத்தது. ஆனால் பாசனக் கால்வாயை கடக்க சிறு பாலம் இல்லாததால் 6 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் இறந்தவர் உடலை தூக்கிக் கொண்டு இறங்கும் போதும் மறுகரையில் ஏறும் போதும் பல நேரங்களில் இறந்தவர் உடல் கீழே விழுந்து பிறகு தூக்கி வைத்து கொண்டு செல்கிறோம். மழைக்காலங்களில் வழுக்கி விழும் சம்பவங்களும் நடந்துள்ளது. பாசன கால்வாயில் தண்ணீர் வந்துவிட்டால் அந்த தண்ணீருக்குள் தான் இறந்தவர்கள் உடல்களை தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதனால் மயானத்திற்கு இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்ல பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story