கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்
கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி ருக்குமணி (வயது 75). இவர் தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் ருக்குமணி நேற்று முன்தினம் மாலை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு அருகே உள்ள குழாய் அருகே சென்றார். அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த கரடி ஒன்று ருக்குமணியை தாக்கியது. இதனால் கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டி விட்டு ருக்குமணியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், சிகிச்சை பெற்று வரும் ருக்குமணிக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை ருக்குமணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.