திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் பலி
திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் பலியானார்.
திண்டுக்கல் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). இவரது மகன்கள் செல்வக்குமார், மணிவேல். இவர்கள் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மற்றொரு தோட்டத்தில் வேலை செய்த முருகன், தனது மகன்களை பார்ப்பதற்காக தென்னந்தோப்புக்கு சென்றார்.
அப்போது அங்குள்ள கிணற்றில் முருகன் குளித்து கொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இதற்கிடையே குளிக்க சென்ற தந்தையை வெகு நேரமாகியும் காணவில்லை என்று செல்வக்குமாரும், மணிவேலும் தேடி சென்றனர். அப்போது முருகன் கிணற்றில் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.