சைக்கிளை திருடி சென்ற முதியவர்
திருவாரூரில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சைக்கிளை முதியவர் திருடி செல்லும் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ வெளியோது.
கொரடாச்சேரி:
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மடவடையார் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர் மடவடையார் தெருவில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் திருவாரூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். அந்த சைக்கிள் சம்பவத்தன்று இரவு ராஜா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த சைக்கிள் காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து ராஜா திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ஒரு முதியவர், சைக்கிளை சாவகாசமாக திருடி செல்லும் காட்சி பாதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த ஒரே மாதத்தில் 3 சைக்கிள் திருட்டு போயிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் திருவாரூர் நகரத்திற்குட்பட்ட விஜயபுரம், கடைத்தெரு, மடப்புரம் போன்ற இடங்களில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவது வாடிக்கையாக உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.