நிலத்தை ஆக்கிரமித்து நூலகம் கட்டுவதாக முதியவர் திடீர் தர்ணா
தனது நிலத்தை ஆக்கிரமித்து நூலகம் கட்டு்வதாக கலெக்டர் அலுவலகம் அருகே முதியவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்ணா போராட்டம்
வேலூர் அருகே உள்ள அரியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 62). இவர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு சாலையோரம் தரையில் அமர்ந்து கோரிக்கை மனுக்களை சாலையில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் கோரிக்கை மனுவை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக குடையில் ஒட்டி வைத்திருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைது சூரிய நாராயணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
ஆக்கிரமிப்பு
எனது தந்தை பெயர் சிவானந்தம். ராணுவவீரராக பணியாற்றியவர். அவரது நிலத்தை அரசு ஆக்கிரமித்து பொது நூலகம் கட்டி வருகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் நிலத்தை அளக்கவும் பணம் கட்டினேன். ஆனால் நிலத்தை அளக்க அதிகாரிகள் வரவில்லை. சொத்துக்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி மோட்டார்சைக்கிளில் அமர வைத்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அதிகாரிகளிடம் மனு அளித்தார்.