வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை, குறைகள் மனுக்களை பெற்றனர்.
வேலூரை அடுத்த பெருமுகையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மேசாக் (வயது 62) என்பவர் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அவர் அருகே உள்ள அறையின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மேசாக் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவருடைய முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றனர். ஆனால் மேசாக் எழுந்திருக்கவில்லை. மேலும் அவரிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
முதியவர் சாவு
இதையடுத்து பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சு ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் மேசாக் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேசாக் மயங்கி விழுந்த இடத்தின் அருகே மனுக்கள் அடங்கிய பைல் ஒன்று காணப்பட்டது. அதனை எடுத்து போலீசார் சோதனை செய்தனர். அதில், மேசாக் அவருடைய மகன் பாலிடெக்னிக் முடித்திருந்த சாகர் சாம்ராஜிக்கு வேலை வழங்கக்கோரி மனு அளிக்க குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதில் காணப்பட்ட சாகர் சாம்ராஜின் செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டு தந்தை உயிரிழந்தது குறித்து தகவல் தெரிவித்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.