பிச்சை எடுத்த ரூ.10 ஆயிரத்தை அனுப்பிய முதியவர்
இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு பிச்சை எடுத்த ரூ.10 ஆயிரத்தை அனுப்பிய முதியவர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடந்தது.
இதில் காவிவேட்டி அணிந்தபடி தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி (வயது 72) என்பவர் பணம் மற்றும் கோரிக்கை மனுவுடன் வந்தார்.
அந்த மனுவில், இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு கலெக்டர் அனுப்பி வைக்கும்படி கூறியிருந்தார்.
இதற்கிடையே கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கிய கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து பூல்பாண்டி கலெக்டர் அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, எழுதுபொருட்கள், மேஜை போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ளேன்.
இதுவரை ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் நிவாரண நிதியுதவி வழங்கி உள்ளேன். தற்போது இலங்கை தமிழர்களின் நலனுக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிச்சை எடுத்த பணத்தை நிவாரணமாக வழங்கி வருகிறேன்.
அதன்படி தற்போது வேலூர் மாவட்டத்தில் எடுத்த பிச்சை பணமான ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி உள்ளேன் என்றார்.