வீட்டுக்கு தீ வைத்த முதியவர் கைது
ஆலங்குளம் அருகே வீட்டுக்கு தீ வைத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் ஆலடிப்பட்டி நடு தெருவைச் சேர்ந்தவர் கணேசன். கோவில் பூசாரியான இவர் இரவு நேரத்தில் வீட்டில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அதே தெருவைச் சேர்ந்த மேகநாதன் (67) என்பவர் பெட்ரோல் கேன் மற்றும் அரிவாளுடன் நடந்து சென்று, கணேசன் வீட்டு முன் வாசல் கதவு மற்றும் ஜன்னலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததுடன் வெளிப்பக்கமாக கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதில் வீட்டு வாசல் கதவு, ஜன்னல் ஆகியவை எறிந்து தீக்கிரையாயின. வெகுநேரம் ஆனபின்பு விழித்து பார்த்த கணேசன், தீ எரிந்து கிடந்ததை கண்டு ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் மேகநாதன், கணேசன் வீட்டுக்கு முன்பகை காரணமாக தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேகநாதனை கைது செய்தனர்.