நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்-அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
திருச்செந்தூர்:
தமிழக ஆசிரியர் கூட்டணியின் திருச்செந்தூர் வட்டார கிளை ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்ல ஆசிரியர் விருது பெற்ற தேரிக்குடியிருப்பு ஆசிரியை வத்சலா மோசசுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்செந்தூரில் நடந்தது.
சங்க வட்டார தலைவர் தியாகராஜ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சாமுவேல் செல்வின் வரவேற்று பேசினார். விழாவில், அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் மாநில பொது செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், துணை செயலாளர் கணேசன், துணை பொது செயலாளர் முனியாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமாரசாமி, அழகுராஜ், திருச்செந்தூர் கல்வி மாவட்ட செயலாளர் பிரின்ஸ், தூத்துக்குடி கல்வி மாவட்ட செயலாளர் ஸ்டீபன்ராஜ், திருச்செந்தூர் கல்வி மாவட்ட பொருளாளர் பெருமாள், வட்டார மகளிர் அணி செயலாளர் எஸ்தர், சாத்தான்குளம் வட்டார செயலாளர் முத்துக்குமாரசாமி, ஆழ்வார்திருநகரி வட்டார செயலாளர் முத்துக்குமார், உடன்குடி வட்டார தலைவர் இமானுவேல், வட்டார செயலாளர் ஞானசேகர், ஆசிரியர்கள் சார்லஸ் இமானுவேல், நிர்மலா சாந்தா லீலா, ஆறுமுக வடிவு, ஈஸ்டர்பாய் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை லீமா நன்றி கூறினார்
பின்னர் அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடப்பு சட்டசபை கூட்ட தொடர் முடிவதற்குள் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்.
இந்த நிதி அமைச்சர் இருக்கும் வரை மக்கள் திட்டமும் சரி, ஆசிரியர்கள் கோரிக்கையும் நிறைவேற போவதில்லை. எனவே தமிழக முதல்-அமைச்சர் நேரில் தலையிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்த சட்டசபை தொடரில் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.