பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
கோவில்பட்டி தலைமை அஞ்சலக வளாகத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் 32-வது போட்ட மாநாடு நேற்று நடந்தது. கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்க கொடியை முன்னாள் மாநில துணை தலைவர் மாரிமுத்து ஏற்றி வைத்தார். உதவி கோட்ட செயலாளர் ரெஜினா ஜாக்குலின் வரவேற்று பேசினார்.
உதவி பொது செயலாளர் சுதீஷ் குமார், தமிழ் மாநில செயலாளர் சுகுமாறன், துணைச் செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாநில செயலாளர் உதயகுமாரன், மாநில பொருளாளர் குணசேகரன், முன்னாள் கோட்ட தலைவர் ராஜேந்திரன், கிளை தலைவர் ராஜன், கிளை செயலாளர் மாரி குருசாமி, கோட்ட செயலாளர் அருண், கோட்ட செயலாளர்கள் முத்தையா, அசோக் குமார் உள்பட பலர் பேசினார்கள்.
தீர்மானங்கள்
மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாற்றுப் பணிக்காக செல்லும் ஊழியர்களுக்கு முன்தொகை வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவேங்கடம் அஞ்சலகத்திற்கு புதிய எழுத்தர், எம்.டி.எஸ். பதவியை உருவாக்கப்பட வேண்டும். கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் கணக்கர் பணிக்கு தகுதியான ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்திற்கு போதுமான ஊழியர்கள் நியமிக்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை ஊழியர்களுக்கு நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை கோட்ட செயலாளர்கள் சமுத்திர பாண்டியன், யோசுவா, ராமர் ஆகியோர் செய்து இருந்தனர்.