தீவட்டிப்பட்டியில் பழமையான ஆலமரம் முறிந்து ரோட்டில் விழுந்தது போக்குவரத்து பாதிப்பு
தீவட்டிப்பட்டியில் பழமையான ஆலமரம் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஓமலூர்.
தீவட்டிப்பட்டியில் பொம்மிடி ரோட்டில் நாச்சினம்பட்டி பிரிவு ரோடு அருகே 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நேற்று தானாக அடியோடு முறிந்து ரோட்டில் விழுந்தது. இதில் மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் தீவட்டிப்பட்டி- பொம்மிடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 2 மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த இடத்தில் அரசு மதுபான கடைகள் 2 உள்ளன. அதில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு போதையில், பழமையான மரம் என்பதால் மரத்தில் உள்ள பொந்துகளில் மதுபான பாட்டில்களை வைத்து சருகுகளை போட்டு தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் மரம் சிறிது, சிறிதாக எரிந்து தற்போது அடியோடு சாய்ந்து விட்டது' என்றார்கள்.