காவிரி ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மூதாட்டி தண்ணீர் மூழ்கி பலி


காவிரி ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மூதாட்டி தண்ணீர் மூழ்கி பலி
x

கரூர் அருகே காவிரி ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மீன்வலையில் கால் சிக்கியதால் மூதாட்டி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

ஆற்றில் மீன்பிடித்த மூதாட்டி

கரூர் மாவட்டம், குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி ராதா (வயது 60). பெரியண்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த ராதா பல நேரங்களில் தனியாக மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை ராதா குளித்தலை காவிரி ஆற்றில் மீன்பிடிக்க தனது பேரக்குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் பேரக்குழந்தைகளை கரையில் அமர வைத்து விட்டு மீன்பிடிப்பதற்காக தண்ணீரில் வலையை விட்டுக் கொண்டே சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்றபோது, மீன் வலை அவரது காலில் சிக்கிக் கொண்டுள்ளது. ஆழமான பகுதி என்பதாலும், அப்பகுதியில் தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்த காரணத்தாலும் ராதா தண்ணீரில் மூழ்கியுள்ளார். காலில் வலை சிக்கிக் கொண்டதால் அவரால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் திணறியுள்ளார்.

பலி

அப்போது அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் ராதா தண்ணீரில் மூழ்கியதை பார்த்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.... என்று சத்தம் போட்டுள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் உடனடியாக அங்கு நீந்தி சென்று தண்ணீரில் மூழ்கிய ராதாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் ராதாவை ஏற்றி கொண்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story