வீட்டை காலி செய்ய கூறியதால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
வீட்டை காலி செய்ய கூறியதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
பண பிரச்சினை
திருச்சி வயலூர்சாலை வாசன் நகர் 3-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை ரூ.5 லட்சத்திற்கு ஒத்திக்கு எடுத்து குடியிருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி கூறியதாக தெரிகிறது. அதற்கு ராஜம்மாள் ஒத்தி பணத்தை திரும்ப தரும்படி கேட்டார்.
ஆனால் வீட்டின் உரிமையாளர் பணத்தை கொடுக்க மறுத்ததோடு, ராஜம்மாளின் மகனை தாக்கியதுடன், அவருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி போலீசில் அவர் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
இதனால் மனமுடைந்த மூதாட்டி நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு, கலெக்டரின் கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு வந்த அவர், தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பொதுமக்களும், போலீசாரும் அவரை தடுத்தனர். பின்னர், அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்களை போலீசார், கடும் பரிசோதனைக்கு பின்னரே வளாகத்துக்கு உள்ளே அனுமதிக்கிறார்கள். ஆனால், மூதாட்டி மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் எப்படி சென்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.