அங்கன்வாடியில் புகுந்துசிறுவனை அழைத்து செல்ல முயன்ற மூதாட்டி


அங்கன்வாடியில் புகுந்துசிறுவனை அழைத்து செல்ல முயன்ற மூதாட்டி
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி வளாகத்தில் புகுந்து சிறுவனை அழைத்து செல்ல முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி வளாகத்தில் புகுந்து சிறுவனை அழைத்து செல்ல முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

மூதாட்டி

ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பயின்று வருகின்றனர். நேற்று பிற்பகலில் உணவு இடைவேளையின்போது சிறுவர்கள் வெளியில் உள்ள மரத்தடியில் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் துரைராஜ் சத்திரத்தெருவை சேர்ந்த பைரோஸ்அமீன் மகன் முகம்மது ரையான் அமீன் (வயது 3½) என்ற சிறுவனை பேராண்டி என்று அழைத்தார்.

சிறுவன் தன்னை அழைப்பது யார் என்று தெரியாமல் விழித்தான். மூதாட்டி சிறுவனின் கையை பிடித்து வாடா பேராண்டி ஊருக்கு போவோம் என்று கூறி அழைத்து செல்ல முயன்றார். ஆனால் சிறுவன் வரமறுத்து பிடிவாதம் பிடித்ததை கண்ட பள்ளி உதவியாளர் ஒருவர் சந்தேகமடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து மூதாட்டி அங்கிருந்து செல்ல முயன்றார்.

பரபரப்பு

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். ேமலும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர். அதில் அவர் ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரக்குடி அம்பேத்கர்தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி காளியம்மாள் (72) என்பது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இவர் சத்திரக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் சந்தை நடைபெறும் நேரங்களில் இதுபோன்று மனநிலை பாதிக்கப்பட்டவரை போல அலைந்து திரிவார் என்றும், கண்ணில் காணும் சிறுவர்களை பேராண்டி என அழைப்பார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூதாட்டியின் மகன்கள் அரசு வேலைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து சிறுவனை அழைத்து செல்ல முயன்ற மூதாட்டியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story