மூதாட்டியின் உடலை ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்ற அவலம்


மூதாட்டியின் உடலை ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்ற அவலம்
x

மன்னார்குடி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை-பாலம் வசதி இல்லாததால் மூதாட்டியின் உடலை ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை-பாலம் வசதி இல்லாததால் மூதாட்டியின் உடலை ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை-பாலம் வசதி இல்லை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் ஊராட்சியில் சாந்தாமாணிக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சுடுகாடு இதே கிராமத்தில் உள்ளது.

இந்த சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. மேலும் இந்த சுடுகாட்டுக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஆறு செல்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு செல்ல ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.

இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர்

இந்த நிலையில் சாந்தாமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மனைவி சீதாலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி நேற்று முன்தினம் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

நேற்று மாலை சீதாலட்சுமியின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் சாந்தாமாணிக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

உரிய சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் சுடுகாட்டுக்கு தூக்கி சென்று மூதாட்டியின் உடலை தகனம் செய்தனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் சுடுகாட்டு செல்வதற்கு முறையான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீர் கொண்டு சென்று தகனம் செய்யும் அவல நிலை உள்ளது.

எனவே அரசு அதிகாரிகள் சாந்தாமாணிக்கம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல உடனடியாக சாலை மற்றும் பாலம் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story