'கவர்னரின் எதிர்கருத்துகளை புன்னகையோடு எதிர்கொள்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' அமைச்சர் பேச்சு


கவர்னரின் எதிர்கருத்துகளை புன்னகையோடு எதிர்கொள்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பேச்சு
x

‘கவர்னரின் எதிர்கருத்துகளை புன்னகையோடு எதிர்கொள்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை,

நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கி தமிழை உயர்த்தி தமிழகத்தை வளர்த்த கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா. இந்த விழாவை ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும், நகரங்களிலும், பகுதிகளிலும், கிராமங்களிலும் ஊர்தோறும் கொண்டாடப்பட வேண்டும் என தலைமை கழகம் அறிவித்து இருக்கிறது.

அப்படி கொண்டாடப்போகின்ற அந்த விழாவுக்கெல்லாம் முதல் விழாவாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியோடு பல ஆண்டுகாலம் பழகி இருக்கிறேன். நம்மையெல்லாம் அவர் வளர்த்து இருக்கிறார்.

கொஞ்சம் கூட மாறாமல் செயல்படுகிறார்

அவரது செயல்பாடுகளில் இருந்து கொஞ்சம்கூட மாறாமல் அவர் விட்ட இடத்தில் இருந்து கட்சியை ஒரு இஞ்ச் கூட இறங்காமல் மேலும் உயர்த்தி காட்டுகிற மகத்தான காரியத்தை மு.க.ஸ்டாலின் செய்து கொண்டு வருகிறார். அதற்காக நான் பெருமைபடுகிறேன்.

தி.மு.க. போன்று ஒரு இயக்கம் உலகத்திலேயே வேறு எங்கும் கிடையாது. மற்ற கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் உறுப்பினர்களை தொண்டர்களே என தலைவர்கள் அழைத்த போது, தம்பி-அண்ணா என கூறி குடும்ப பாசத்தோடு செயல்பட்ட பெருமை தி.மு.க.வுக்கு மட்டும் தான் உண்டு.

ராஜராஜனும், ராஜேந்திர சோழனும்

அண்ணாவுக்கு பிறகு இந்த இயக்கத்துக்கு மகத்தான இளைஞர்களை ஈர்த்த பெருமை கருணாநிதிக்கு மட்டும்தான் உண்டு. கருணாநிதி ஒரு வரலாற்று மனிதர். இலக்கியம், பேச்சு எழுத்து, நாடகம், போராட்டம், தியாகம் என பன்முகத்தன்மையை கொண்டவர் கருணாநிதி. தமிழ்நாடு வரலாற்றில் நிறைந்த மாமனிதர் கருணாநிதி. இதை எந்த கொம்பனாலும் எடுத்து விட முடியாது.

உலகத்திலேயே 50 ஆண்டுகாலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்த ஒரே மனிதர் கருணாநிதி மட்டும்தான். தமிழக, இந்திய, உலக வரலாற்றில் முத்திரை பதித்து வரலாறு படைத்திருக்கிற கருணாநிதியைபோல் வேறு ஒரு தலைவரை பார்க்க முடியாது.

தந்தையும், மகனும் ஒரு சேர இருந்து புகழ் சேர்த்தவர்கள் ராஜராஜனும், ராஜேந்திர சோழனும் தான். அப்படி அப்பாவும்-பிள்ளையும் ஒன்றாக இருந்து ஒரே நேரத்தில் புகழ் சேர்த்தவர்கள் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான்.

நாம் தான் கவர்னரிடம் சண்டையிட வேண்டும். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் கவர்னர் நம்மிடம் சண்டைக்கு வருகிறார். அதை கூட புன்னகையோடு சமாளிப்பவர் மு.க.ஸ்டாலின். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முக்கிய தலைவர்களுடன் கருணாநிதியின் புகைப்படங்கள்

பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதி முழுவதும் கருணாநிதி பல்வேறு காலக்கட்டங்களில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசிய புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது.

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில், பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியை பொதுமக்கள் எளிதில் கண்டுகளிக்கும் வகையில் 4 பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது.


Next Story