வட்டிக்கு பணம் கொடுத்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஒடுகத்தூர் அருகே வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் அதை திருப்பி கொடுக்காததால் விரக்தி அடைந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வட்டிக்கு பணம்
ஒடுகத்தூரை அடுத்த தேவிசெட்டி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 60). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். அந்தப்பகுதியை சேர்ந்த சிலருக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வட்டிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம், பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்த கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். சிலர் பணத்தை திருப்பித் தர முடியாது என்று அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த பிரகாஷ் அங்குள்ள விவசாய நிலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணம்வாங்கியவர்கள் யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.