மாணவர்களுக்கு முடி வெட்டுவது தொடர்பாக கலெக்டர் தெரிவித்த கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மாணவர்களுக்கு முடி வெட்டுவது தொடர்பாக கலெக்டர் தெரிவித்த கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் அதன் செயலாளர் விஜயகுமார் தலைமையில் பொருளாளர் செல்வராஜ், இணைத்தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் வேலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு சீராக முடிவெட்டாத சலூன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் முடிதிருத்தும் தொழிலாளர்களாகிய நாங்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம். முடிதிருத்தும் தொழிலை அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் கட்டாயத்தின் பேரில் தான் அவர்கள் சொல்லும்படி முடிதிருத்தம் செய்கிறோம். எங்கள் விருப்பத்தின் பேரில் விதவிதமாக முடி திருத்தம் செய்வது கிடையாது. எனவே கலெக்டர் மாணவர்களுக்கு முடிவெட்டுவது தொடர்பாக தெரிவித்த கருத்தை மறுபரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலாஜி, அதனை கலெக்டரிடம் கொடுப்பதாக தெரிவித்தார்.