'சந்திரயான்-3' விண்கலத்தின் சுற்றுப்பாதை 60 ஆயிரம் கி.மீ. உயர்த்த திட்டம்


சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 60 ஆயிரம் கி.மீ. உயர்த்த திட்டம்
x

‘சந்திரயான்-3’ விண்கலம் பூமியின் அதிகபட்ச தூரத்தில் இருந்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட இருக்கிறது.

சென்னை,

டெல்லி விஞ்ஞான் பிரசார், சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னை அறிவியல் பலகை அமைப்புகள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அறிவியல் மையத்தில் அறிவியல் விரிவுரை தொடர்கள் நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதுதொடர்பான அறிவியல் விரிவுரை கூட்டம் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு செயல் இயக்குனர் லெனின் தமிழ் கோவன் தலைமை தாங்கினார். இதில் விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு 'சந்திரயான்-3' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது குறித்து பேசினார்.

கூட்டத்தில் கோட்டூர்புரம் ஏ.எம்.எம். பள்ளி, எத்திராஜ் பெண்கள் கல்லூரி, தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கும் விடை அளிக்கப்பட்டது.

60 ஆயிரம் கி.மீ. உயர்வு

பின்னர், விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரயான்-3 விண்கலம் பூமியை 2 முறை வெற்றிகரமாக சுற்றி வந்துள்ளது. நாளை (இன்று) 3-வது முறையாக பூமியை சுற்றி வர இருக்கிறது. முதல் முறை பூமியை சந்திரயான்-3 விண்கலம் சுற்றும் போது பூமியில் இருந்து அதிகபட்ச தூரத்தை 36 ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து 42 ஆயிரம் கிலோ மீட்டராக அதனுடைய சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது.

2-வது நாள் சுற்றும்போது பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமான 175 கிலோ மீட்டரில் இருந்து 200 கிலோ மீட்டராக சுற்றுப்பாதையை உயர்த்தி உள்ளனர். 3-வது நாளாக நாளை (இன்று) பூமியை சுற்றும்போது அதிகபட்ச தூரத்தை 42 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கிலோ மீட்டராக அதனுடைய சுற்றுப்பாதையை அதிகரிக்கப்பட இருக்கிறது.

நிலவை நோக்கி பயணம்

இப்படி படிப்படியாக புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் படிப்படியாக உயர்த்தப்படும். தற்போது திட்டமிட்டபடி விண்கலம் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது. தேவையான எரிபொருளும் இருப்பதால் நல்ல முறையில் செயல்படுகிறது. வருகிற 31-ந்தேதி வரை புவிவட்டப்பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நிலவை நோக்கி பயணிக்க இருக்கிறது.

தொடர்ந்து 5-ந்தேதி நிலவு சுற்றுப்பாதைக்கு சந்திரயான்-3 விண்கலம் செல்லவிருக்கிறது. தொடர்ந்து 23-ந்தேதி வரை சுற்றிவரும் விண்கலம், அன்று மாலை 5.47 மணிக்கு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story