அகழியில் குதித்து அரிசி ஆலை அதிபர் தற்கொலை
தொழிலில் நஷ்டம் அடைந்ததால் விரக்தி அடைந்த அரிசி ஆலை அதிபர் அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
தொழிலில் நஷ்டம் அடைந்ததால் விரக்தி அடைந்த அரிசி ஆலை அதிபர் அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரிசி ஆலை அதிபர்
ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50). இவர் களம்பூர் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இழப்பை தாங்காமல் வேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பின் 1½ மணியளவில் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் இருந்து பின்பகுதியில் உள்ள அகழியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தண்ணீருக்குள் தேவேந்திரன் விழும் சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அங்கு வந்து டார்ச்லைட் அடித்தும் செல்போன் லைட் உதவியாலும் பார்த்தனர். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மீட்பு
இதனை தொடர்ந்து அவர்கள் ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் சென்று அகழிக்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேவேந்திரனை மீட்ட அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆரணி நகர போலீசில் தேவேந்திரனின் மனைவி சரஸ்வதி புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் அடைந்ததால் அரிசி ஆலை அதிபர் அகழியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.