பன்றிகளை பிடிக்க வந்த குழுவினரை மடக்கி உரிமையாளர்கள் வாக்குவாதம்
பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் பன்றிகளை பிடிக்க வந்த குழுவினரை மடக்கி உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் பன்றிகளை பிடிக்க வந்த குழுவினரை மடக்கி உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பன்றிகள் தொல்லை
பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பன்றி, நாய்கள், குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளது. குறிப்பாக வெட்டுவானம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்தப் பன்றிகள் கோவிலை சுற்றியும், குளங்களைச் சுற்றியும் சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருவதால் அவற்றை பிடிக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பன்றிகளை பிடிப்பதற்காக செங்கல்பட்டில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு வந்தனர். அதிகமாக பன்றிகள் வளர்க்கும் இடத்தில் அந்தக் குழுவினர் முகாமிட்டு சுமார் 16 பன்றிகளை பிடித்து வேனில் ஏற்றினர். அப்போது பன்றிகளை வளர்த்து வரும் அதன் உரிமையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பன்றிபிடிக்கும் குழுவினரை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பன்றிகளை பிடித்த தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பன்றி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சுபபிரியா குமரன், துணைத் தலைவர் வசிம் அக்ரம், மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், அலுவலக உதவியாளர்கள், 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பன்றி உரிமையாளர்கள் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதற்கு பேரூராட்சி செயல்அலுவலர் உமாராணி 40 பன்றிகளை பிடித்து வெளியூருக்கு அனுப்பினால் 400 குட்டி பன்றிகளை இங்கு கொண்டு வந்து வளர்த்து வருகிறார்கள். எனவே கால அவகாசம் வழங்க முடியாது என கூறினார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
எச்சரிக்கை
இதனையடுத்து வரும் 27-ந் தேதிக்குள் அனைத்து பன்றிகளையும் பேரூராட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். தவறினால் நாங்களே பன்றிகளைப் பிடித்து வெளியேற்றுவோம் என அவர்களுக்கு செயல் அலுவலர் உமாராணி எச்சரிக்கை விடுத்தார்.