வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகின


வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகின
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாண்டஸ் புயல் காரணமாக வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மாண்டஸ் புயல் காரணமாக வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விளைநிலங்களை சூழ்ந்தது

கடந்த வாரம் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம், புதுக்குப்பம், கீழமூவர் கரை உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. வழக்கத்தைவிட பல மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்ததால் மடத்துக்குப்பம், தொடுவாய் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் கடல்நீர் புகுந்தது. இதனால் மீனவ கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

நெற்பயிர்கள் அழுகின

அதேபோல் கடல் சீற்றத்தின் காரணமாக புது குப்பம் வாய்க்கால், சிங்கார வடிகால் வாய்க்கால், செல்லநாறு, தென்னாம்பட்டினம் உப்பனாறு உள்ளிட்ட ஆறுகளின் வழியாக கடல் நீர், சின்னப் பெருந்தோட்டம், அகர பெருந்தோட்டம், நெய்த வாசல், தென்னாம்பட்டினம், கீழையூர் உள்ளிட்ட கிராமங்களில் 1,500 ஏக்கர் விளைநிலங்களை கடல் நீர் புகுந்து நெற்பயிர்கள் மூழ்கின. தற்போது கடல்நீர் வடிந்து வரும் நிலையில் நெற்பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் மேற்கண்ட கிராமங்களில் 1,500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இந்த தண்ணீர் ஒரு வாரமாக வடியாத காரணத்தால் பயிர்கள் அழுகி சேதம் அடைந்தன. இதனைத் தொடர்ந்து தண்ணீர் வடிந்த பின்னர் மீதமுள்ள நெற்பயிர்களுக்கு களையெடுத்து உரம், பூச்சி மருந்துகளை தெளித்து காப்பாற்றினோம். இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் நீர் விளைநிலங்களில் புகுந்ததால் நெற்பயிர்கள் மூழ்கின. தற்போது கடல் நீர் வடிய தொடங்கிய நிலையில் பயிர்கள் அழுகி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டுஉரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story