வீடு புகுந்து பெயிண்டர் வெட்டிக்கொலை
திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெயிண்டர்
திண்டுக்கல் அருகே உள்ள நடுமாலப்பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29). பெயிண்டர். அவருடைய மனைவி ஷர்மிளா (19). இந்த தம்பதிக்கு சஸ்விகா ஜி என்ற 4 மாத குழந்தை உள்ளது. நேற்று ஷர்மிளா, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகே உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
முனீஸ்வரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று பகலில் அவர் வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர்.
சரமாரி வெட்டிக்கொலை
பின்னர் அவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர். இதனைக்கண்டு திடுக்கிட்டு விழித்த முனீஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார். அவர்களிடம் இருந்து தப்பிக்க, வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினார்.
ஆனால் அந்த கும்பல், அவரை சுற்றி வளைத்து பிடித்து தலையை குறி வைத்து சரமாரியாக வெட்டினர். இதேபோல் கழுத்து, வயிற்று பகுதியிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் முனீஸ்வரனின் முகம் சிதைந்தது. குடல் சரிந்து வெளியே வந்தது. ரத்த வெள்ளத்தில் முனீஸ்வரன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர். இதற்கிடையே முனீஸ்வரன் வீட்டில் இருந்து மர்ம நபர்கள் செல்வதை கண்ட அக்கம்பக்கத்தினர், ஏதோ விபரீதம் நடந்தது என நினைத்து அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். அப்போது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மோப்பநாய் சோதனை
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்நாராயணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தார். சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதேபோல் போலீஸ் மோப்ப நாய் டிம்பி வரவழைக்கப்பட்டது. அது, பண்ணைப்பட்டி பிரிவு வரை ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொலை வழக்கு
இதனையடுத்து முனீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முனீஸ்வரன் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் முன்விரோதம் காரணமாக முனீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனர்.
முனீஸ்வரனின் உடலை பார்த்து, அவருடைய மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பட்டப்பகலில் வீடு புகுந்து பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதிைய ஏற்படுத்தியுள்ளது.