பழையாறு சுனாமி குடியிருப்பை தண்ணீர் சூழ்ந்தது
கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பழையாறு சுனாமி குடியிருப்பை தண்ணீர் சூழ்ந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரம் உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் மற்றும் மேலவாடி ஆகிய கிராமமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுனாமி குடியிருப்பு
அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு அதிகாரிகள் செய்து கொடுத்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் ெகாள்ளிடத்தில் சென்றது. கொள்ளிடத்தில் ெதாடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பழையாறு சுனாமி குடியிருப்பை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், அங்குள்ள மக்களும் முகாம்களை நோக்கி சென்று வருகின்றனர்.
தீபாவளி கொண்டாட முடியாமல் தவிப்பு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும்போது மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து கொள்ளிடத்தில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கொள்ளிடம் கரையோரம் உள்ள 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது 6-வது முறையாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. அனைத்து தரப்பு மக்களாலும் இன்று(திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், முகாம்களில் தங்கியுள்ள எங்களால் எப்படி தீபாவளியை கொண்டாட முடியும். தண்ணீர் வற்றிய பிறகுதான் வீடுகளுக்கு செல்ல முடியும். கடந்த 50 ஆண்டுகளாக இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்