பம்புசெட் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
வாணியம்பாடி அருகே பம்புசெட் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுவர் இடிந்து தொழிலாளி பலி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று காலை பம்பு செட் சீரமைக்கும் பணி நடந்தது. மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூலித் தொழிலாளிகள் 5 பேருடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிந்து விழுந்த சுவருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் வடக்குபட்டு கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
3 பேர் படுகாயம்
மேலும் அவருடன் பணியாற்றிய மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில், முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இறந்த விக்னேஷ் உடலை, தீயணைப்புத் துறையினரை வரவழைத்து பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி ஒருவருடம்...
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த தொழிலாளி விக்னேஷுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது. இவரது மனைவி சீதா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.