பயணிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
அரசு பஸ்சில் அதிக கட்டணம் வசூலித்த வழக்கில், பயணிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலருக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
குன்னூர்,
அரசு பஸ்சில் அதிக கட்டணம் வசூலித்த வழக்கில், பயணிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலருக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
விரைவு கட்டணம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோடேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் 5.8.2019-ந் தேதி மஞ்சூரில் இருந்து கீழ்குந்தா கிராமத்திற்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.7 கொடுத்தார். பின்னர் கீழ்குந்தாவில் தனது பணியை முடித்து விட்டு மனோகரன் அதே பஸ்சில் மஞ்சூருக்கு திரும்பி வந்தார். அப்போது டிக்கெட் கட்டணமாக ரூ.11 அவரிடம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து பஸ் கண்டக்டரிடம் கேட்ட போது, மஞ்சூரில் இருந்து பஸ் கோவை செல்வதால் விரைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஆனால், பஸ்சில் கட்டண பட்டியல் விவரம் வைக்கப்பட வில்லை என தெரிகிறது. இதனால் அரசு பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனோகரன் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கொரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணை முடிய தாமதம் ஆனது.
இழப்பீடு தொகை
இந்தநிலையில் வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. மஞ்சூர்-கீழ்குந்தா வழித்தடத்தில் பஸ் கண்டக்டர் வசூலித்த கூடுதல் தொகையை பயணிக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளரும், வட்டார போக்குவரத்து அலுவலரும் நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வழக்கு செலவாக ரூ.3,000 வழங்க வேண்டும்.
வழக்கு தொடுத்த மனோகரன் கோரிய படி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட 19.1.2019-ந் தேதி முதல் இதுவரை சாதாரண பஸ்சில் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.
இந்த தொகையை மாவட்டத்தில் மக்கள் இடையே நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். இழப்பீடு தொகையை 2 மாதங்களுக்குள் வழங்கவில்லை என்றால் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி சித்ரா மற்றும் உறுப்பினர் டாக்டர் சசிராஜா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.