நம்ம விருத்தாசலத்தில் 'நம்ம டாய்லெட்'டின் பரிதாப நிலை


நம்ம விருத்தாசலத்தில் நம்ம டாய்லெட்டின் பரிதாப நிலை
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் உள்ள ‘நம்ம டாய்லெட்’டுகள் பராமரிப்பின்றி பரிதாபமான நிலையில் காணப்படுகின்றன.

கடலூர்

விருத்தாசலம்,

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு நகர பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்பில் நம்ம டாய்லெட் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் விருத்தாசலம் நகர பகுதியில் 13 இடங்களில் ரூ.1.25 கோடி மதிப்பில் ஆங்காங்கே 'நம்ம டாய்லெட்' கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதாவது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில், வேடப்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் விருத்தாசலத்தை சுற்றிலும் அமைந்துள்ளதாலும், பல்வேறு அரசு அலுவலகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகியவை அமைந்துள்ளது. இதனால் சேலம், கோவை, திருச்சி, சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் விருத்தாசலம் நகருக்கு வந்து செல்கின்றனர்.

தண்ணீர் வசதி இல்லை

அவ்வாறு வந்து செல்லும் மக்களின் நலனுக்காக நகரில் பல்வேறு இடங்களில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கழிவறைகள் அமைக்கப்பட்டதும், அதற்கான தண்ணீர் வசதி உள்ளிட்ட பிற வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தராததால், அந்த டாய்லெட்டை பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக மணிமுக்தாற்றின் கரையில் ஆயியார் மடத்தெரு பகுதியில் அமைக்கப்பட்ட இந்த டாய்லெட்களுக்காக, மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டிக்கு தான் தண்ணீர் வரவில்லை.

இதனால் அந்த நம்ம டாய்லெட்டு்கள் வெறும் காட்சிப் பொருளாக இருப்பதுடன், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் சிலர் மணிமுக்தாற்றின் கரையையே திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் விருத்தாசலம் மணலூர் ஆற்றங்கரை அருகே அமைக்கப்பட்ட நம்ம டாய்லெட்டும் பயன்பாடு இன்றி கிடப்பதுடன், அது இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு முட்புதர்களால் சூழப்பட்டு காடுபோல் காணப்படுகிறது.

தவிக்கும் பெண்கள்

இதேபோல் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நம்ம டாய்லெட் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான பராமரிப்பின்றி தற்போது மூடி கிடக்கிறது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து விருத்தாசலத்திற்கு வரும் பெண்கள் அவசரத்திற்கு கூட ஒதுங்க முடியாமல் தவித்து வருகின்றனர். டாய்லெட் இருக்கிறதே என ஓடிச் செல்லும் பெண்கள் அது மூடி கிடப்பதை பார்த்ததும் முகம் சுளித்தபடி திரும்பிச் செல்கின்றனர். இலவச கழிவறையை சரிவர பராமரிக்காததால் தான் வேறு வழியின்றி கட்டணம் கட்டி கழிவறைக்கு பெண்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல் நகரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கழிவறைகளுக்கும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து கொடுக்காததால், அவை அனைத்தும் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக கிடக்கிறது. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட கழிவறைகளுக்கு அரசு செலவிட்ட ரூ.1.25 கோடி விரயமாகியுள்ளது.

பாழாகி கிடக்கும் கழிவறை

இதுதவிர விருத்தாசலம் நகருக்கு வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மக்கள் நகரில் எங்கும் கழிவறை வசதி இல்லாததால் திறந்தவெளி இடங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது நகரில் திறந்தவெளி இடங்களை தேடி அலைகின்றனர். குறிப்பாக டாய்லெட் வசதி போதிய அளவு இல்லாததால், வெளியூர் மக்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மணிமுக்தாற்றின் கரையோர பகுதிகளை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நகரில் எங்கு சென்றாலும் சுகாதாரமின்றி காணப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே திறந்தவெளி இடங்களை கழிவறையாக பயன்படுத்துவதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாடின்றி பாழாகி கிடக்கும் நம்ம டாய்லெட் திட்ட கழிவறைகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார சீர்கேடு

விருத்தாசலம் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த ஷகிலா கூறுகையில், சேலம், திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில் மட்டுமே கட்டண கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. கடலூர், சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் நம்ம டாய்லெட் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச கழிவறை மூடியே கிடக்கிறது. இதனால் கட்டண கழிவறையை பயன்படுத்தும் ஆண் மற்றும் பெண் பயணிகள் அடிக்கடி தாங்கள் செல்லும் பஸ்களை தவற விடுகின்றனர். இதனால் கழிவறைகள் எதுவும் இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர்.

மேலும் ஆண்கள் சுற்றுச்சுவர் மற்றும் திறந்த வெளிகளை கழிவறையாக பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையம் திறந்தவெளி கழிவறையாக இருப்பதால் மழைக்காலங்களில் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகளின் அவசர வசதிகளுக்கு உடனடியாக கழிவறைகளை புதிதாக அமைத்து தர வேண்டும் என்றார்.


Next Story