தென்பெண்ணையாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம்:
கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழைகாரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணை நிரம்பியதால் அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் உபரிநீராக கடந்த 5-ந் தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீரானது தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் ஆகிய தாலுகாக்களில் அமைந்துள்ள கரையோர கிராமங்களின் வழியாக செல்கிறது.
பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனையும் மீறி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி எடுக்கும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மேற்கண்ட செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.