புதர்களை வெட்டி அகற்றிய முதுமலை ஊராட்சி மக்கள்
வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக சாலையோரம் புதர்களை முதுமலை ஊராட்சி மக்கள் வெட்டி அகற்றினர்.
கூடலூர்,
முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. ஊராட்சி பகுதியில் முதுகுளி, நம்பிக்குன்னு, கூவக்கொல்லி, நாகம்பள்ளி உள்பட பல கிராமங்கள் உள்ளது. இப்பகுதிக்கு பஸ் போக்குவரத்து வசதி கிடையாது. இதனால் அடிப்படை தேவைகளுக்காக ஊராட்சி மக்கள் பெரும்பாலானோர் தினமும் தங்களது கிராமங்களில் இருந்து கால்நடையாக நடந்து போஸ்பாராவுக்கு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் நடந்து செல்லும் சாலையின் இருபுறமும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வருகிறது. இதனால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இடையே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் போஸ்பாரா-முதுகுளி செல்லும் சாலையின் இருபுறமும் புதர் மண்டி காணப்பட்டது. இதனால் அச்சத்துடன் அனைவரும் நடந்து சென்று வந்தனர். இதனிடையே கூடலூர் பகுதியில் சாரல் மழை மட்டும் சில சமயங்களில் பெய்கிறது. இதனால் ஊராட்சி மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று 2 கி.மீட்டர் தூரம் சாலையோர புதர்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.