அரசு பஸ்சில் கண்டக்டரை தாக்கி சங்கிலி பறித்தவர்கள ஓட்டம் பஸ்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி போராட்டம் நடந்ததால் பரபரப்பு
வந்தவாசி அருகே அரசு பஸ்சின் கண்டக்டரை தாக்கி தங்க சங்கலியை பறித்து ஓடிய நபர்களை கைது செய்யக்கோரி பஸ்களை ரோட்டின் குறுக்கே டிரைவர், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே அரசு பஸ்சின் கண்டக்டரை தாக்கி தங்க சங்கலியை பறித்து ஓடிய நபர்களை கைது செய்யக்கோரி பஸ்களை ரோட்டின் குறுக்கே டிரைவர், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
கும்பகோணத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மீலட்டூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மேகநாதன் (வயது 34) ஓட்டினார். கண்டக்டராக அதே தாலுகாவில் உள்ள அலவாந்திபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் (55) இருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் இறங்குவதால் பஸ்சை நிறுத்த வேண்டும் என பஸ்சில் வந்தவர் கேட்டுள்ளார். ஆனால் கண்டக்டர் முருகானந்தம், அந்த இடத்தில் பஸ் நிற்காது என கூறியுள்ளார். இது குறித்து இளங்காடு கிராமத்தில் உள்ளவர்களுக்கு செல்போனில் பேசி இளங்காடு கூட்ரோடுக்கு அந்த நபர் வரவழைத்துள்ளார்.
இந்த நிலையில் இளங்காடு கூட்ரோடு அருகே பஸ் நின்றபோது அங்கு நின்றவர்களுடன் அந்த நபர், கண்டக்டரை சரமாரியாக தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றார். இதனால் பஸ்சிலிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பஸ்சை நிறுத்தி போராட்டம்
இதையடுத்து பஸ்சை டிரைவர், கண்டக்டர் திண்டிவனம்- வந்தவாசி சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்களின் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களும் பஸ்சை நிறுத்திவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் அரசு பஸ் இருந்தவர்களை வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.