போலீசாரால் தேடப்பட்ட நபர் விழுப்புரம் கோர்ட்டில் சரண்
வாலிபர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட நபர் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தேவனூர்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் அருள்குமார் (வயது 37). இவர் கடந்த 29-ந் தேதி மணலூர்பேட்டை- திருவண்ணாமலை சாலை பா.வு.ச.நகர் அங்கன்வாடி மையம் அருகே பலத்த வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அருள்குமாருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி ஆத்தியந்தல் பகுதியை சேர்ந்த மாமலைவாசன் என்பவருக்கும் கந்துவட்டி தொடர்பாக இருந்து வந்த முன்விரோதம் காரணமாக மாமலைவாசன் தரப்பினர் அருள்குமாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.இச்சம்பவம் தொடர்பாக மாமலைவாசன், சூர்யா, இளங்கோவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த தங்கராசு மகன் லோகு என்கிற லோகநாதன் (35) என்பவர் நேற்று விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டு ராதிகா உத்தரவின்பேரில் லோகநாதன் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.