கள்ளக்குறிச்சி வன்முறையில் சான்றிதழ்களை எரித்தவர் கைது..!


கள்ளக்குறிச்சி வன்முறையில் சான்றிதழ்களை எரித்தவர் கைது..!
x

கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்களுக்கு தீவைத்த நபரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்து கடலூர், வேலூர், திருச்சி ஆகிய சிறைகளில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் தீவைத்து எரிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தீ வைத்த நபர், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், திருப்பூரில் வைத்து லட்சாதிபதியை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story