போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தவர் தற்கொலை
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த சிக்கத்தம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான தாமரைச்செல்வன் (37) என்பவருக்கும் இடையே கழிவுநீர் செல்லும் பாதை காரணமாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில், தாமரைச்செல்வனின் மனைவி சுகன்யாதேவியை ராஜேந்திரனும், அவரது மனைவி கோவிந்தம்மாளும் அடித்ததாக தாமரைச்செல்வன் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் ராஜேந்திரன், அவரது மகள் புவனா, மனைவி கோவிந்தம்மாள் ஆகியோரும் உப்பிலியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டு அருகே உள்ள வேப்பமரத்தில் ராஜேந்திரன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.