மிளாவை வேட்டையாடிய ஆசாமி கைது;இறைச்சியை சமைத்த 12 பேருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
ஆரல்வாய்மொழி அருகே மிளாவை வேட்டையாடி பங்கு போட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். இறைச்சியை சமைத்த 12 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே மிளாவை வேட்டையாடி பங்கு போட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். இறைச்சியை சமைத்த 12 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மிளா வேட்டை
பூதப்பாண்டி வன சரகத்திற்குட்பட்ட மருந்துவாழ் மலை அருகே உள்ள மயிலாடி ஆலடிவிளை பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 2 மிளாக்கள் வேட்டையாடப்பட்டது.
பின்னர் அதன் இறைச்சியை பங்கு போடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் கோட்ட உதவி வன பாதுகாவலர் மேற்பார்வையில் வனவர் பாலசந்திரிகா, தலைமையில் வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், அசோர், சிவராமன் வேட்டை தடுப்பு காவலர்கள் சிவா, பிரவின் ஆகியோர் அடங்கிய குழுவினர் மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த லிங்கம் (வயது 48) என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு மிளா இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருவர் கைது; ரூ.3 லட்சம் அபராதம்
தொடர்ந்து அவரிடம் வனத்துறை விசாரணை நடத்தியதில் செல்வராஜன் (51) என்பவரது நிலத்தில் அவருடைய துணையுடன் அதே பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம், ஜோசப், சூரியகுமார் (19) மற்றும் 18 வயதுடைய நபர் சேர்ந்து 2 மிளாக்களை கண்ணி வைத்து வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து லிங்கம் (வயது 48) கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் அந்த இறைச்சியை லிங்கத்தின் உறவினர்களான சொத்தவிளை கண்ணன், தட்சணாதேவி, ஒசரவிளை கிருஷ்ண தங்கம், சுமத்ரா தேவி, ரவிக்குமார், கோசலா தேவி, சேகர், ஜெயலெட்சுமி, ஸ்ரீகிருஷ்ணா, வசந்தா, சுயம்பு, செந்தாமரை லெட்சுமி ஆகிய 12 பேர் சமைத்துள்ளனர். அந்த நபர்களுக்கு வனவியல் சட்டப்படி மிளா இறைச்சியை சமைத்ததற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.