போலி நகையை அடகு வைத்தவர் கைது


போலி நகையை அடகு வைத்தவர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பளுகல் அருகே போலி நகைகளை அடகு வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

பளுகல் அருகே போலி நகைகளை அடகு வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

போலி நகையை அடகு வைத்தார்

குமரி மாவட்ட பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட புல்லந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின். இவருடைய மனைவி ஜூலி. இவர் அதே பகுதியில் நகை அடகுகடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் ஜூலி மட்டும் கடையில் இருந்தார்.

அப்போது ஒருவர் வந்து ரூ.69 ஆயிரத்திற்கு நகை அடகு வைத்துள்ளார். ஆனால், கடையில் போதிய பணம் இல்லாததால் ரூ.49 ஆயிரத்தை கொடுத்து விட்டு மீதி ரூ.20 ஆயிரத்தை அரை மணி நேரம் கழித்து வந்தால் தருவதாக ஜூலி கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் ரூ.49 ஆயிரத்துடன் அங்கிருந்து சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து ஜூலி அந்த நகையை உரசி பார்த்துள்ளார். அப்போது அது போலி நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது தான் அந்த செல்போன் எண்ணும் தவறானது என்பது தெரிய வந்தது.

மீண்டும் வந்த போது சிக்கினார்

அதே சமயத்தில் அந்த நபர் மீண்டும் அடகு கடைக்கு வந்தார். உடனே சுதாரித்துக் கொண்ட ஜூலி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கிப்பிடித்து பளுகல் போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பாறசாலை பகுதியைச் சேர்ந்த பெர்னார்டு (வயது50) என்பது தெரிய வந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பளுகல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு அடகுகடையில் பெர்னார்டு தனது கூட்டாளிகள் நஜூப், அருண் ஆகியோருடன் சேர்ந்து இதேபோல் ரூ.70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதும், கேரளா மாநிலம் காரக்கோணம், பாறசாலை பகுதியிலும் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெர்னார்டை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story